நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட் தேர்வை
நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி 1184 மதிப்பெண்
பெற்றுள்ளேன். எனது மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் 199.25 ஆகும்.
ஆனால் நீட் தேர்வில் 154 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளேன். இதனால் எனக்கு
மருத்துவப் படிப்பில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது
மருத்துவப் படிப்பு கனவாகி விட்டது.
நீட் தேர்வு விஷயத்தில் ஒரு நிலையான உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசால்
எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான நிலை தமிழக மாணவர்களுக்கு பெரும் மன
உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில்
வெற்றிபெற்றிருந்தும் மருத்துப் படிப்பில் சேர முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிக கட் ஆஃப்
மதிப்பெண்ணும் எடுத்துள்ள என்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்குமாறு
தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மாணவி கிருத்திகா தரப்பு வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து
மொத்தம் 83 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் வெறும் 5 சதவீதம்
மட்டுமே சிபிஎஸ்இ தரப்பு மாணவர்கள்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200
எடுத்தவர்கள் கூட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முடியாத கடினமான
நிலையில் தமிழக மாணவர்கள் உள்ளனர். எனவே, தமிழக மாணவர்களுக்கு உரிய இடத்தை
தருமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் வக்கீல்
வேல்முருகன் இடையிட்டு மனுவைத் தாக்கல் செய்து வாதிடும்போது, நீட் தேர்வை
சிபிஎஸ்இ தான் நடத்துகிறது.
பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள்
கேட்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். சிபிஎஸ்இ தரப்பில் வக்கீல்
வி.பி.ராமனும் ஆஜராகி, நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்குகளையும் உயர்
நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
அப்போது அவரிடம் நீதிபதி, கேள்வித்தாளை யார் தயார் செய்தது என்று
கேட்டார். அதற்கு வி.பி.ராமன் சிபிஎஸ்இதான், ஆனால், மாநிலப்
பாடத்திட்டமும் கேள்வித்தாளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது
என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன்,
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு
முன்னோடியாக உள்ளது.
ஆனால் நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலமாகவும் தமிழகம்தான் உள்ளது. நீட்
தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும்
எடுத்துள்ளது. இதில் யாரையும் குறை சொல்லமுடியாது. அனைத்து கட்சிகளும்
ஒன்று சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி தீர்மானத்தையும்
நிறைவேற்றின.
ஜல்லிக்கட்டுக்குப் பிறகு நீட் தேர்வு விஷயத்தில்தான் அனைத்து அரசியல்
கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களும்
நீட் தேர்வில் பங்கேற்றபோது, சிபிஎஸ்இயை இந்த தேர்வை நடத்த மத்திய அரசு
அனுமதித்தது ஏன். இந்த தேர்வை சிபிஎஸ்இ நடத்தாமல், கேள்விகளை சிபிஎஸ்இ
தயாரிக்காமல் நடுநிலையான ஒரு அமைப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு
குளறுபடிகள் ஏற்பட்டு இருக்காது. நீட் தொடர்பான வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேநேரம், தமிழகத்திற்கான மருத்துவ
இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள்
இருக்கிறதா என்பதும் சந்தேகமே. எனவே இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு நாளை
பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார். வழக்கில் இன்று
தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் முன்னதாக வழக்கு நேற்று காலை நீதிபதி
கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, ‘நீட்’
விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு
துரோகம் விளைவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நிலையான முடிவையும் தமிழக
அரசு ஆரம்பத்திலிருந்தே எடுக்கவில்லை. மருத்துவ படிப்பில், மாநில
பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு ‘நீட்’ தேர்வு
அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து
விவரங்களையும் பிற்பகலில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு
உத்தரவிட்டார்.