ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை.

"ஜெயலலிதா மறைவு மற்றும் வர்தா புயல் பாதிப்பு ஆகிய காரணங்களால் தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை நாட்களில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் சில ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், விடுமுறைகளை சமன் செய்யும் நோக்கத்தில், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்படும், என்று தகவல் பரவியது.

 ஆனால், இதை மறுத்துள்ள பள்ளி கல்வித்துறை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை எப்போதும் போல இருக்கும். விடுமுறை நாட்கள் குறைக்கும் எந்த திட்டமும் இல்லை, என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், “தற்போது அரையாண்டு தேர்வு நடைப்பெற்று வருகிறது. 23-ந் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழக்கமான விடுமுறையாகும் இது. இந்த விடுமுறை நாட்களை குறைக்கவில்லை. 


தமிழக முதல்வர் மறைவையொட்டி அளிக்கப்பட்ட ஒரு நாள் அரசு விடுமுறை, வார்தா புயல் விடுமுறையால் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ் முதல் தாள் மற்றும் கணிதம் ஆகிய 2 தேர்வும் நடைபெறவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்த உடன் அந்த தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களை குறைக்காமல் சிறப்பு வகுப்புகள் மூலம் இதனை ஈடு செய்வோம். தற்போது எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மரங்கள் விழுந்து இருந்த போதிலும் வகுப்பறைகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது. ஒரு சில இடங்களில் மின் வினியோகம் இல்லாமல் உள்ளது. 2 நாட்களில் அவை சீராகும்,  என்று தெரிவித்தார்.