
புதுதில்லி
நவம்பர் 8ம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று
அறிவிக்கப்பட்டதையடுத்து ரூ.23,000 கோடி மதிப்பிலான ரூ.500, 1000 நோட்டுக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த பழைய நோட்டுக்களை கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 140 டன்னுக்கும் அதிகமான பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் இந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை மிஷின்கள் மூலம் எரித்து, அதனை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.
ஒரு வாரத்திற்கு 40 டன் பயன்பாடற்ற ரூபாய் நோட்டுக்களை இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது. இதற்காக டன் ஒன்றிற்கு ரூ.250 ஐ இந்நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு விலையாக தருகிறது.
சோதனை முயற்சியாக பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 10 முதல் 15 பைகள் எரிக்கப்பட்டு, பிளைவுட் தயாரிப்பதற்கான கூழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.