வகுப்பில் 'ஹலோ... ஹலோ' : ஆசிரியர்கள் கலக்கம்!!!

வகுப்பில் அலைபேசி பயன்படுத்துவதை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளில் அலைபேசி பயன்படுத்துவதால் பணி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வகுப்புகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.'அவற்றை எடுத்துச் சென்றாலும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவை பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றுவதில்லை. சமீபத்தில், ஈரோடு மாவட்டத்தில் வகுப்பு நேரத்தில், ஆசிரியர்களை அலைபேசியில் அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆய்வு செய்தனர். அலைபேசியில் பேசிய சில ஆசிரியர்களுக்கு 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது.இதே முறையை மற்ற மாவட்டங்களிலும் பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.