குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழக அரசுத்துறையில், குரூப் 2 ஏ பிரிவில், நேர்முக எழுத்தர், உதவியாளர், திட்ட இளநிலை உதவியாளர், கீழ்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பதவிகளுக்கு, 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஜனவரி, 24ல் நடந்த தேர்வில், 6.54 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை ஆகியவை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தேர்வர்கள் தங்களின் பொது தரவரிசை, சமூக
ரீதியான தரவரிசை மற்றும் சிறப்பு பிரிவு தரவரிசை ஆகியவற்றை, தங்களின் பதிவு எண் மூலம் அறியலாம். இணையவழி விண்ணப்பத்தில், தேர்வர்கள் குறிப்பிட்ட வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், ஜூலை 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை, காலியிடம் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.