அரசு ஊழியர்களுக்கு கமிஷன் எச்சரிக்கை

வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசு
ஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. மே, 16ல் ஓட்டுப்பதிவு நடப்பதால், அதற்கு முன்னதாகவே, கவுன்டிங் ஏஜென்ட் பட்டியலை அளிக்கும்படி வேட்பாளர்களை, தேர்தல் கமிஷன்அறிவுறுத்தியுள்ளது.


மே, 19ல் ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரின் மேஜையையும் சேர்த்து, 15 மேஜைகள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒருவர் வீதம், 15 கவுன்டிங் ஏஜென்ட்களை நியமிக்கலாம். வேட்பாளர் தவிர்த்து, அமைச்சர், எம்.பி., - -எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதிகளை ஏஜென்டாக நியமிக்கக் கூடாது. மேலும், 'மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டம் - 1951' பிரிவு, 134 'ஏ'யின்படி, அரசு ஊழியர்கள் கவுன்டிங் ஏஜென்டாக பணிபுரியக் கூடாது; மீறி பணிபுரிந்தால், மூன்று மாதம் சிறை அல்லது
அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது