தமிழகத்தில் ப்ளஸ் 2 மற்றும் பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வமான
அறிவிப்பு இன்னும் வௌியிடப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும்
கலக்கத்தில் உள்ளனர். தேர்தலுக்கு முன்பு தேர்வு முடிவுகள் அல்லது தேர்தல்
முடிவுகள் வெளியாகும் தேதியையாவது அறிவிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2
பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்து விட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள்
வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை
வெளியிடப்படவில்லை.
மே 6 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்
எனவும், கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் மே 7 ம் தேதி வெளியாகலாம் அல்லது
மே 9ம் தேதி வெளியாகலாம் என பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதால்
பெற்றோரும், மாணவர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.
இதற்கிடையில் இன்ஜினியரிங்
படிப்புக்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்று
வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு
வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொது
நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும், 2ம் கட்ட மருத்துவ பொது நுழைவுத்
தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண் தெரியாததால் மாணவர்கள் அடுத்து எந்த
கல்லூரியில் விண்ணப்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.