கட்டாய தமிழ் பாட பிரச்னைக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

சென்னை:கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர், டாக்டர் சாதிக், தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. '1 முதல், 10ம் வகுப்பு வரை, கண்டிப்பாக தமிழ் மொழியை, ஒரு பாடமாகக் கற்க வேண்டும்' என, அந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த, தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு, 2014 மே மாதம், மனு அனுப்பினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது, கல்வித் துறை அதிகாரிகள், '10ம் வகுப்பு வரை, தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். மேலும், '2016 மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில், தமிழ் பாடம் கட்டாயம் இருக்கும்' எனவும் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுகள் எதுவும் வராததால், இதுவரை, தமிழ் பாடத்தை எங்கள் பள்ளிகளில் கற்பிக்கவில்லை. மேலும், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
தமிழ் மொழி கற்றல் சட்டத்தை அமல்படுத்தினால், மற்ற மொழிகளை கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள், படிப்பை பாதியில் விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள், தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், 'சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க வேண்டும்' என விரும்புகிறோம்.எனவே, நாங்கள் அனுப்பிய மனுவை பைசல் செய்யவும், அதுவரை, பள்ளி கல்வி உத்தரவுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, பல மனுக்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தாக்கல் செய்த பதில் மனு:பொதுத் தேர்வு

தமிழ் ஆசிரியர்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு, பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. 2006 - 07 முதலே, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் மொழி கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தை, பொதுத் தேர்வில் எழுத வேண்டிய விவகாரத்தில், மனுதாரர்கள் விதிவிலக்கு கோர முடியாது.
சட்டம் அமலுக்கு வந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தமிழ் பாடத்துக்கு விதிவிலக்கு கோருபவர்களின் பிரச்னையை, உரிய அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். 2016 மார்ச் மாதம், பொதுத் தேர்வு வருவதால், இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது உகந்ததாக இருக்கும் என, நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து ஆலோசித்து, ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். விசாரணை, நவ., 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.