கல்வி முறையை மாற்ற தலாய்லாமா வலியுறுத்தல்

சென்னை:''சர்வதேச அளவில், கல்வி முறையை மாற்ற, இளைய தலைமுறையினர் முயற்சிக்க வேண்டும்,'' என, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா வலியுறுத்தினார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் லட்சிய இயக்கம் சார்பில், 'அப்துல் கலாம் சேவா ரத்னா' என்ற பெயரில் விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.


அதிக வளம்:'மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்' தலைவர் சிவராமன் வரவேற்புரையாற்றினார். திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா பங்கேற்று, பல பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, விருதுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:இந்தியாவில் தான் வளர்ச்சிக்கான அதிக வளம் உள்ளது. மதச்சார்பற்ற தன்மை மற்றும் சகிப்புத்தன்மையுடன், உலகில் தங்களுக்கே உரிய கலாசாரத்தை விட்டுத்தராமல் உள்ள, ஒரே நாடு இந்தியா. அப்படிப்பட்ட நாட்டில், மிகப்பெரிய அறிவியலாளராக, மாணவர்களின் கதாநாயகனாக திகழ்ந்த கலாமைப் பார்த்து, பலமுறை வியந்துள்ளேன்.
நான் மிகவும் மதிக்கும் நபர்களில் அப்துல் கலாமும் ஒருவர். அவரைப் பலமுறை டில்லியில், ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

அவரது கனவுப்படி, செயல்திட்டம் வகுத்து அந்த பாதையில் சிறந்து விளங்கியோருக்கு, அவரது பெயரில் விருதுகள் வழங்குவது பாராட்டத்தக்கது. இந்த விருதில் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளோ, பணமோ பெரிதல்ல. அப்துல் கலாம் பெயரில் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது தான் முக்கியமானது.இந்த விருதை பெற்றுள்ள நீங்கள், இன்னும் அதிக அளவு கடமைக்கு ஆளாகிறீர்கள். உங்கள் செயல்களை இன்னும் சிறப்பாக தொடர வேண்டும். இந்த
அடிப்படையில், தற்போதைய கல்வி முறை, நம் இளைய தலைமுறையினருக்கும், சமூகத்துக்கும் போதுமானதாக இல்லை.எனவே, இளைய தலைமுறையினர் இனி வரும் காலங்களில், அமைதியான, இதமான வாழ்க்கை முறையை, மனிதாபிமானத்தை ஏற்படுத்த, கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விருது பெற்றவர்கள்:மரக்கன்று நடுதல் மற்றும் வளர்த்தல், நீர்நிலைகளை பராமரித்தல், துாய்மையான குடிநீர் வழங்கல், சுற்றுப்புறங்களை பசுமையாக வைத்தல், போதை மீட்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.'ட்ரீ பேங்க்' நிறுவனத்தைச் சேர்ந்த முல்லைவனம்; கோவை, 'சிறுதுளி' நிறுவனத்தைச் சேர்ந்த லலிதா மோகன்; விருதுநகர், ஆத்திப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன; டில்லியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் செல்லமுத்து அறக் கட்டளையின் ராம.சுப்ரமணி யன் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.