அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை: வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக  மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

       வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே உருவான மேலடுக்கு சுழற்சி, தற்போது தென்கிழக்காக நகர்ந்து, கடல் மட்டத்திலிருந்து 3.1 கி.மீ உயரத்தில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக  மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  இதேபோல மரக்காணத்தில் 5 செ.மீ., மகாபலிபுரம் 4 செ.மீ., கேளம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.