நேரில் வந்தால் போதும்: டாக்டர் வேலை ரெடி!

சென்னை,: 'நேரில் வந்தால் போதும்; நல்ல சம்பளத்துடன் வேலை தருகிறோம்' என, தமிழக அரசின், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., டாக்டர்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்துள்ளது. இந்த முறையில், 547 உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில், தேவைக்கேற்ப போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2,176 உதவி டாக்டர்கள், 7,243 நர்ஸ்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில், திடீரென, 'எந்த தேர்வும் இல்லை; நேரில் வந்தால் நல்ல சம்பளத்தில் வேலை தரப்படும்; 547 டாக்டர்கள் தேவை. நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, எம்.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எழுத்துத் தேர்வு நடத்தி, டாக்டர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் கால தாமதம் ஏற்படுவதால், உடனடியாக பணி வழங்கும் வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 547 இடங்களும், ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும். இதுபோல், எம்.எஸ்., - எம்.டி., முடித்த டாக்டர்களும் தேர்வு செய்யப்படுவர்' என்றனர்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் ரவீந்தரநாத் கூறுகையில், ''ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களில், 200 டாக்டர்கள், 1,500 நர்ஸ்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். தேர்வு இன்றி, டாக்டர்களுக்கு வேலை என்பது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்,'' என்றார்.