நேதாஜி ஆவணங்கள் ஜன., 23ல் வெளியீடு

டில்லி:'சுதந்திரப் போராளி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், 2016, ஜனவரி, 23ம் தேதி முதல் வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என, பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.

நேதாஜி குடும்ப உறுப்பினர்கள், 35 பேர், டில்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமரின் இல்லத்தில், மோடியை சந்தித்து பேசினர். இது குறித்து, மோடி டுவிட்டரில் வெளியிட்ட செய்தி:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினரை என் இல்லத்தில் வரவேற்றது, பெருமையாக உள்ளது. அவர்களுடன், குறிப்பிடத்தக்க வகையில், விரிவாக விவாதித்தேன்.
அப்போது, 70 ஆண்டுகளுக்கு முன், மர்மமான முறையில் காணாமல் போன, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என, அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், வெளிநாடுகளிடம் உள்ள நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடவும் ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நேதாஜியின் அனைத்து ஆவணங்களையும் வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும், 2016, ஜனவரி, 23ம் தேதி, நேதாஜியின் பிறந்த நாள் அன்று, ஆவணங்களின் வெளியீடு துவங்கும். அதுபோல், வெளிநாடுகளிடம், நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு, மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். இதன்படி, முதன் முதலாக, ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்கப்படும்; இதற்கான நடவடிக்கை, வரும், டிசம்பரில் துவங்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செப்டம்பரில், நேதாஜி தொடர்பான, 64 ஆவணங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.