பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாகத் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கழிவுநீர், மழைநீர் சேகரிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன், பல இடங்களில் நீர் நிலைகளையும் மாசு படுத்துகின்றன. எனவே, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசுத்துறைகளும் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், சென்னை யில் உள்ள பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்து உள்ளது.சென்னை முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன் விவரம்:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், ஆபத்துகள் குறித்து, மாணவி, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில், துணிப்பை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.'துணிப்பையை கையில் எடுப்போம்; பிளாஸ்டிக் பையை கைவிடுவோம்' என்ற செய்தியை, பள்ளி பிரார்த்தனைக் கூட்டத் தில் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில், 'எக்கோ க்ளப்' சுற்றுச்சூழல் மன்ற ங்கள், 'நேஷனல் க்ரீன் கமிட்டி' என்ற தேசிய பசுமைப் படை அமைக்க வேண்டும்.பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவிய போட்டிகள், விவாதம், நாடகம், கண்காட்சிகள் நடத்தி, பிளாஸ்டிக்கின் அபாயம் மற்றும் மறுசுழற்சி முறை குறித்து, மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறியச் செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.