ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்

தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் கள் நியமனம் நடந்தது.டெட் தேர்வு நடத்தாவிட்டால், ஆசிரியர்களுக்கு தரப்படும், 50 சதவீத ஊதிய மானியம் கிடைக்காது என, மத்திய அரசு
எச்சரித்தது. அ.திமு.க., ஆட்சிக்கு வந்ததும், 2012 முதல் டெட் தேர்வு கட்டாயம் எனவும், தேர்வில், 150க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது.


வழக்கு:

முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. அதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்திலிருந்து, மூன்று மணி நேரமாக மாற்றி, மறுதேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.பின், 2013 ஆகஸ்டில், இரண்டாவது டெட் தேர்வு நடத்தி, தேர்ச்சிப் பட்டியல் வெளியான நிலையில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற வகுப்பினருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வை அரசு அளித்தது.இதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 7,500 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில், இரண்டு இடங்களில் இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களும், மதிப்பெண் சலுகை பெற்றவர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் தான், தமிழக அரசு விழித்துக் கொண்டு, மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.இந்த பிரச்னைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய, நான்கு, டெட் தேர்வுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தவில்லை. இதனால், ஆசிரியர் பணியை நம்பி, பி.எட்., மற்றும் டி.எட்., படித்த ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

கட்டாயம்:

தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேரவும், டெட் தேர்வு கட்டாயம் என்பதால், டெட் தேர்வு எழுத முடியாத, ஏற்கனவே தேர்ச்சி பெறாதோர், குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பல்வேறு படிப்புகளை முடித்து விட்டு பணிக்காக காத்திருக்கும், 90 லட்சம் பேரில், எட்டு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள்.

இதுகுறித்து, தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக் கழகத்தின் தலைவர், ஆர்.செல்லதுரை கூறியதாவது:அரசு சரியான கொள்கை முடிவு எடுக்காததாலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்காததாலும், டெட் தேர்வு அறிவிப்பு கானல்நீராகி விட்டது.அதனால், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், தனியார் பள்ளிப் பணிக்கு செல்லக்கூட முடியாத சூழல் உள்ளது. மேலும், ஏற்கனவே அரசு அறிவித்தபடி, 90 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட, வேலைவாய்ப்பை வழங்காதது வேதனைக்குரியது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு உத்தரவிட்டால், எப்போது வேண்டுமானாலும் டெட் தேர்வு நடத்தத் தயாராக உள்ளோம்,' என்றனர்.

8 லட்சம் பேர் யார்?

கடந்த முறை 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, 6 லட்சம் பேர், கடந்த, இரண்டு ஆண்டுகளில் பி.எட்., முடித்து உள்ள, 1.8 லட்சம் பேர்,
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்த, 20 ஆயிரம் பேர் என, 8 லட்சம் பேர் காத்து இருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள், டெட் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள் சொல்வது என்ன?

''டெட் தேர்வு குறித்து, தமிழக அரசு நிபுணர் குழு அமைத்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஆண்டுதோறும், ஆசிரியர் காலியிடங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தரம் உயரும் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் என, மூன்று வகைகளில், ஆண்டுக்கு, 10 ஆயிரம் இடங்கள் காலியாகின்றன. இவற்றில் காத்திருப்பில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும். இதைவிட்டு, அரசு, இலவச திட்டங்களில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.
- பி.பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு