அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்! : நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை

- வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்

       தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.

          தமிழகத்தில், அரசு வேலைக்கென தனி மவுசு இருந்து வருகிறது. படித்து, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய வசதியாக, மாநிலம் முழுவதும், 37 வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் உள்ளன. இங்கு பதிவு செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஐ.டி., நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் கால் பதித்து, சம்பளத்தை பல மடங்கு அள்ளிக் கொடுத்தாலும், அரசு வேலைக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறையவில்லை.ஆண்டுதோறும், எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

தற்போது, 86 லட்சம் பேருக்கு மேல், அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த தகவல், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. இதில், 44 லட்சம் பேர் பெண்கள்; இந்த எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.

இதில், இடைநிலை ஆசிரியர்கள் - 81,800; பட்டதாரி ஆசிரியர் - 3.95 லட்சம்; இன்ஜினியரிங் பட்டதாரிகள் - 2 லட்சம்; அறிவியல் பட்டதாரிகள் - 3.25 லட்சம்; கலைப் பிரிவு பட்டதாரிகள் - 4.30 லட்சம்; வணிகவியல் பட்டதாரிகள் - 3.25 லட்சம். மாற்றுத்திறனாளிகள் - 1.12 லட்சம் பேர். இது தவிர, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில், 22,198 பேர்பதிவு செய்துள்ளனர்.

கடந்த, 2010ல், வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை, 67 லட்சமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் அதிகரித்துள்ளது.


* காத்திருப்பு உயர்வது ஏன்?

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:

ஆண்டுதோறும், 20 ஆயிரம் என, 4.5 ஆண்டுகளில், ஒரு லட்சம் அரசு ஊழியர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஆண்டுக்கு, 5,000 பேர் என, நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் பேருக்குத் தான், அரசு துறைகளில் வேலை தரப்பட்டுள்ளது.

ஏற்கனவே, காலி பணியிடங்கள் அதிகம் உள்ள நிலையில், ஓய்வு பெறுவோரின் இடங்களையும் நிரப்பாததால், காலி பணியிடங்களின் 


எண்ணிக்கை, நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.

மின் ஆளுமைத் திட்டத்தைக் கொண்டு வந்து, குறைந்த ஆட்களை வைத்து பணியாற்றலாம் என்ற கணக்கில், அரசு காலியிடங்களைநிரப்பாமல் இருந்து வருகின்றன. 15 ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், அரசின் இயலாமையால், மின் ஆளுமைத் திட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை.

வேலை வாய்ப்பு அளிப்பது பல ஆண்டுகளாக குறைந்து வருவதால், பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்னும், இரண்டு, மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் அரசு ஊழியர் ஓய்வு பெறுவர். அப்போது நிலைமை இன்னும் சிக்கலாகும். எனவே, காலி பணியிடங்களை நிரப்புவதில், அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்த சிக்கல் தீரும்.இவ்வாறு அவர் கூறினார். 


1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை:

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன் சட்டசபையில் கூறிய தாவது:

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை பணியமர்த்தல் உதவிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, நான்கு ஆண்டுகளில், 87,737 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேர், அரசு துறையில் பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், 5.42 லட்சம் பேருக்கு, 94.39 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.