ஓசூரில் பிளஸ்-2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது

ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ்-2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி கணிதத்தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மொத்தம் 323 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் உள்ள ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினார்கள். ஒரு மாணவர் தேர்வு எழுத வரவில்லை.

‘வாட்ஸ் அப்’பில் அனுப்பினார்

இந்த நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்போன் மூலம், வினாத்தாளை புகைப்படம் எடுத்தார். பின்னர் அதை செல்போனின் ‘வாட்ஸ் அப்’ மூலம் மற்றொரு ஆசிரியரான உதயகுமார் என்பவருக்கு அனுப்பினார்.

இதற்கிடையே, தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த தேர்வு மையத்திற்குள் வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்த போது, பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், மைய கண்காணிப்பாளரான மகேந்திரனிடம் சோதனை செய்தார்.

அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது தெரியவந்தது. “தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் மட்டுமல்ல, கண்காணிப்பாளரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், நீங்கள் எப்படி செல்போனை எடுத்து வந்தீர்கள்?” என்று பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர்.

அதிகாரிகளிடம் புகார்

பின்னர் ஆசிரியர் மகேந்திரனின் செல்போனை அதிகாரிகள் வாங்கி பார்த்தனர். அதில் ‘வாட்ஸ் அப்’ மூலம், அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத்தேர்வின் வினாத்தாள் பிறருக்கு அனுப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தனக்கு வந்த வினாத்தாளை ஆசிரியர் உதயகுமார் மேலும் 2 ஆசிரியர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து பறக்கும் படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு கண்காணிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோரிடம் புகார் செய்தனர். அவர்கள் இது குறித்து மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்ய உத்தரவிட்டனர்.

4 ஆசிரியர்கள் கைது

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் உத்தரவின் பேரில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள், பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்களை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார் மற்றும் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.சி.டி.வி. கேமராவில் பதிவு

ஓசூரில் பிளஸ்-2 தேர்வு வினாத்தாள் ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியான தேர்வு மையத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் நடக்கும் நிகழ்வுகளை கேமரா மூலம் பார்க்கும் வசதி உள்ளது. தற்போது வினாத்தாள் வெளியான வகுப்பறையிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதில் ஆசிரியர் மகேந்திரன், வினாத்தாள் பக்கங்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, உறுதிப்படுத்தவும் இல்லை. அதே நேரத்தில் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.

ஓசூரில் ஆசிரியரே வினாத்தாளை செல்போனில் படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயன் அடைந்தவர்கள் யார்? என்றும், எத்தனை தேர்வுக்கு இதேபோல் வினாத்தாள்களை புகைப்படம் எடுத்து கொடுத்து இருக்கிறார்கள்? என்பது குறித்தும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.