தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல்


சென்னை,
தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்த ஓய்வுப்பெற்ற நீதிபதி
என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கட்டணம் நிர்ணயக்குழு தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வமணி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தனியார் சுயநிதி மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குழு, தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை. எனவே, கல்வி கட்டணம் நிர்ணய குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
நீதிபதி நியமனம் இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சிவசண்முகராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்து, கடந்த மாதம் 18–ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த கல்வி கட்டணம் குழு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை ஏற்க தமிழக அரசு தயாராக உள்ளது’ என்று கூறியுள்ளார். இந்த பதில் மனுவை கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.