பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகிறார் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற ஜனவரி மாதம் இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தின ராக அவர் கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர், பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்து, அந்த நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.

அமெரிக்கா பயணம்

கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

26-ந் தேதி நியூயார்க் போய்ச் சேர்ந்த அவர், 27-ந் தேதி ஐ.நா. சபையில் பேசினார். அப்போது அவர் இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா பற்றி பேசியதுடன், சர்வதேச யோகா தினம் அறிவித்து கடைப்பிடிக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதை உலக நாடுகள் பலவும் வரவேற்றன.

ஒபாமாவுடன் சந்திப்பு

நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, 29-ந் தேதி வாஷிங்டன் சென்றார். அன்று இரவு அவர் வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை முதல் முதலாக சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு ஒபாமா தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து கவுரவித்தார்.

30-ந் தேதியும் ஒபாமாவை மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய- அமெரிக்க உறவை வலுப்படுத்துவது, இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமல்லாது, உலக விவகாரங்கள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா வருகிறார், ஒபாமா

அப்போது ஒபாமாவை இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஒபாமாவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஒபாமாவின் இந்திய வருகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி மாதம் இறுதியில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதை பிரதமர் மோடி, நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்

அதில் அவர், தலைநகர் டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வருகையின்போது, ஒபாமாவுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்து கவுரவிக்கிறார். இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.