காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில் தகுதியானவர்களுக்கு 9 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல், காலதாமதப்படுத்துவதால் இனியாவது முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களின் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க மாநில தலைவர் ஜேம்ஸ் பாலகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின் நலத்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது.
1970ம் ஆண்டு துவங்கப்பட்ட பிற்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதி அடிப்படை பணியாளர்களில் கல்வித் தகுதி உடையவர்களுக்கு அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து சங்கம் மூலம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் உத்தரவிட்டும், 9 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்வி விடுதி அடிப்படை பணியாளர்கள், கல்லர், சீர்மரபினர் நலத்துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்கவில்லை.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதி அடிப்படை பணியாளர்களில் கல்வித் தகுதி உடையவர்கள் மாவட்டத்தில் ஒருசிலரே உள்ளனர். இவர்களது முதுநிலைப் பட்டியல், சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்க ஏன் 9 ஆண்டுகாலம் ஆகிறது என தெரியவில்லை. எனவே, உடனடியாக விடுதி அடிப்படை பணியாளர், இரவு காவலர் மற்றும் சமையலர்கள் பதவி உயர்வு பெற தேவையான முதுநிலைப் பட்டியலை தயாரித்து உடனடியாக இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.