இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.


தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், டிசம்., 23ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், elections.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, டிசம்பர், 23ல் துவங்கியது; ஜன., 22 வரை நடக்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, www.nvsp.in என்ற இணையதளத்திலும், 'VOTER HELPLINE' என்ற, மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.மேலும், இன்றும், நாளையும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில், விண்ணப்பம் அளிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அரசு அல்லது அரசு சார் பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு.உழவர் அடையாள அட்டை, குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையஸ் காஸ் இணைப்பு ரசீது ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றின் நகலை, முகவரி சான்றாக சமர்பிக்கலாம்.

வயது சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றிதழின் நகல் அளிக்கலாம். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கண்டிப்பாக வயது சான்றிதழ் அளிக்க வேண்டும். ஜன., 1ல், 18 வயது பூர்த்தியானவர்களும், வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணபிக்கலாம்.'சிறப்பு முகாம் வாய்ப்பை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

ஆசிரியர்கள் அதிருப்தி
அரையாண்டு விடுமுறை முடிந்து, அனைத்து பள்ளிகளும், இன்று திறக்கப்பட உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு சென்றனர். ஓட்டு எண்ணிக்கை நேற்று நிறைவடைந்தது. இன்று பள்ளிகள் திறக்கப்படுவதுடன், வாக்காளர் சிறப்பு முகாம் பணிகளையும் கவனிக்க வேண்டியிருப்பது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.