ஆராய்ச்சி பயிற்சி வகுப்பு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான,
ஆராய்ச்சி பயிற்சி வகுப்புக்கான அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் ஜெகதீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் படிக்காத, மற்ற இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, ஆராய்ச்சி பயிற்சி வகுப்புகளை, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது. கோடை விடுமுறையில், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இரண்டு மாதங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சிக்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு தகுதியான மாணவர்கள், 'ஆன்லைன்' வழியே, பிப்., 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை இன்ஜினியரிங் மற்றும் முதுநிலையில் இன்ஜினியரிங், மேலாண்மை மற்றும் கலை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மே, 20 முதல், ஜூலை, 19 வரை, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். கூடுதல் விபரங்களை, sfp.iitm.ac.in/contactus என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.