'குரூப் - 4' தேர்வில் 13 லட்சம் பேர், 'பாஸ்'

சென்னை : 'குரூப் - 4' தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 72 நாட்களில் வெளியிட்டு, சாதனை
படைத்துள்ளது.

இந்த தேர்வில், 13 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரி உட்பட, பல்வேறு பதவிகளில், 6,491 காலியிடங்களுக்கு, செப்., 1ல் போட்டி தேர்வு நடந்தது.இதில், 16.30 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளின் முடிவு, குறைந்தபட்சம், 105 நாட்களில் வெளியிடப் பட்டது.

இந்த முறை, அதை விட ஒரு மாதம் குறைவாக, 72 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல்தேர்வு முடிவில், 7.19 லட்சம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள், 5.13 லட்சம்; மூன்றாம் பாலினத்தவர், 25; முன்னாள் ராணுவத்தினர், 4,104; ஆதரவற்ற பெண்கள், 4,973; மாற்றுத் திறனாளிகள், 16 ஆயிரத்து, 601 பேர் என, மொத்தம், 12.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல், விரைவில் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

இதற்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும், 'இ - மெயில்' வழியாக மட்டுமே, விபரங்கள் தெரிவிக்கப்படும். தபால் வழி கடிதம் அனுப்பப்படாது என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த தேர்வாணையமும், இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை, இட ஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில், தர வரிசைப்படுத்தி வெளியிட்டதில்லை.இதில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், நாட்டிலேயே முன்னணி அமைப்பாக செயல்பட்டுள்ளது.

டிஜிட்டல் பக்கம்தேர்வுகளில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, தேர்வர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் விபரங்கள் அடங்கிய விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் வினாத்தாளில் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்ட, கணினி தகவல் தொழில் நுட்பத்தில், தனியாக டிஜிட்டல் பக்கம் உருவாக்கப்பட்டு, தேர்வர்களின் கோரிக்கைகள் குறைந்த நாட்களில் பரிசீலிக்கப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.