பள்ளி, கல்லுாரிகளில் தோட்டக்கலை குழு

பள்ளி, கல்லுாரிகளில், தோட்டக்கலை குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.


பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி, அவற்றை உண்பதால் கிடைக்கும் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி, கல்லுாரிகளில், 'தோட்டக்கலை குழு' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு, 'ஹார்ட்டி கிளப்' என, ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, தோட்டக்கலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.
இது குறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி, கல்லுாரிகளில் அமைக்கப்படும் குழுக்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும். குழுவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இந்த நிதியில், தோட்டங்கள் அமைத்து, பராமரிக்க வேண்டும். இதற்காக, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுப்பர்.சிறப்பாக செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும். விரைவில், இதற்கான விண்ணப்பங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதில், அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்க, வேளாண் துறை செயலர், ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.விருப்பமுள்ள பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.