கல்லுாரிகளை 'சோதிக்கும்' ஆசிரியர் தகுதி நிர்ணய யு.ஜி.சி., உத்தரவு

மதுரை : பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) நிர்ணயித்துள்ள ஆசிரியர்கள் தகுதி குறித்து மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் சின்னையா, தனியார் கல்லுாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 60 சதவீதம் வரை சுயநிதி கல்லுாரிகள். இங்கு, செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடிக்காத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர்.இந்நிலையில் 'நீதிமன்றம் வழக்கு ஒன்றின்படி யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள செட்/நெட் அல்லது பிஎச்.டி., தகுதி இல்லாதவர்களை இக்கல்வியாண்டு முதல் நியமிக்கக் கூடாது' என கல்லுாரிகளுக்கு மதுரை காமராஜ் பல்கலை சுற்றறிக்கை அனுப்பியது.

அந்த சுற்றறிக்கை ஆசிரியர் தகுதி குறித்து தெளிவில்லாமலும், யு.ஜி.சி., குறிப்பிடாத நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலையிழக்கும் அச்சத்தில் உள்ளனர்.

மிரட்டும் சுற்றறிக்கை:
ஆசிரியர் தகுதி குறித்த யு.ஜி.சி., விதித்த உத்தரவில், செட்/நெட் அல்லது பிஎச்.டி., தகுதி இல்லாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்பி வைக்கும்படி மதுரை காமராஜ் பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் பல்கலை பதிவாளர் சின்னையா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர் தகுதி விதியை பின்பற்றாத கல்லுாரிகளில் பாடப் பிரிவு இணைப்பை ரத்து செய்யப்படும் என மிரட்டும் வகையில், நீதிமன்ற உத்தரவை மீறி குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்லுாரிகள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவிற்கு இதுவரை பதிவாளர் ஏதும் பதில் அளிக்கவில்லை.

பல்கலை நீக்குமா:
அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலை உறுப்பு கல்லுாரிகளிலும் இதே தகுதியுடைய ஆசிரியர்கள் பலர் பாடம் நடத்துகின்றனர். அந்த மாணவர் நிலை என்னவாகும். அந்த ஆசிரியர்களை பல்கலை பணி நீக்கம் செய்துள்ளதா?

இணைப்பு கல்லுாரிகளை மட்டும் ஏன் பதிவாளர் 'இணைப்பை ரத்து செய்வோம்' என மிரட்டுகிறார். பிஎச்.டி.,க்கு ஆசிரியர்களை தயார்படுத்தும் தகுதியுள்ள வழிகாட்டிகள் (கைடுகள்) மிக குறைவாக உள்ள நிலையில் ஒரே நேரத்தில் எவ்வாறு தகுதியற்ற அனைத்து ஆசிரியர்களையும் தயார் செய்ய முடியும். கல்லுாரிகள் திறக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தலாமா என கல்லுாரி நிர்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது: தனியார் கல்லுாரிகளில் யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதிகளை எத்தனை ஆசிரியர்கள் பூர்த்தி செய்யவில்லை என பல்கலை சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இதற்கிடையே பதிவாளர் வெளியிட்ட இந்த அவசர சுற்றறிக்கை குழப்பமாக உள்ளது. யு,ஜி.சி., வெளியிட்ட தகுதி பட்டியலில் '2009 ஜூலை 11 க்கு முன் எம்.பில்., பதிவு செய்து, கல்லுாரிகளில் தொடர்ந்து தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகுதி பெற்றவர்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுபோன்ற விவரங்களை சுற்றறிக்கையில் பதிவாளர் குறிப்பிடவில்லை.

இதே தகுதி அடிப்படையில் அரசு கல்லுாரிகள், உதவி பெறும் கல்லுாரிகளில் பலர் நிரந்தர பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெரும்பாலான தனியார் கல்லுாரிகளில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதி இல்லை. இதை முறையாக முன்கூட்டியே கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில் அறிவுறுத்தியிருந்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் உரிய தகுதியை பெற்றிருக்க முடியும். ஆனால் தகுதியை காரணம் காட்டி ஒரே நேரத்தில் ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்தால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஆசிரியர் குடும்பங்களும் பாதிப்பிற்குள்ளாகும்.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடத்தில் பிஎச்.டி., நெட்/செட் முடித்த ஆசிரியர்களை உடன் நியமிப்பது பெரும் சிரமம்.

முரண்பாடு:
மருத்துவக் கல்லுாரிகளில் முதுகலை படித்தவரே இளங்கலைக்கும், பொறியியல் கல்லுாரிகளில் எம்.இ., முடித்தவர்களே பி.இ.,க்கும் பாடம் நடத்துவதாக தெரிகிறது. அங்கெல்லாம் பிஎச்.டி., கட்டாயம் இல்லை என தெரிய வருகிறது.

யார் தவறு:
அதேநேரம், இந்தாண்டு ஜூனில் நடக்க வேண்டிய செட் தேர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியிட முடியாமல் பெரும் குழப்பத்தில் உயர்கல்வி துறை உள்ளது. அதேநேரம், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து கல்லுாரிகளுக்கும் பிஎச்.டி., முடித்த ஆசிரியர்கள் கிடைப்பது மிக கடினம். இதனால் யு.ஜி.சி., உத்தரவை நிறைவேற்ற கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன. அதேநேரம் ஏற்கெனவே கல்லுாரிகள் கேட்டுக்கொண்டுள்ளபடி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் தகுதியை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்குவதை யு.ஜி.சி., பரிசீலிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் தற்போது கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் இத்தகுதியை பூர்த்தி செய்ய அவகாசம் வழங்க முன்வர வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதேநேரம் இணைப்பு கல்லுாரிகள் நல்ல முறையில் நடப்பதற்கான சூழ்நிலையை பல்கலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதைவிட்டு கல்லுாரிகளை மிரட்டும் வகையில் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என கல்லுாரி நிர்வாகங்கள் விரும்புகின்றன.

பொது அமைப்பு உருவாக்க வேண்டும்:
ஒவ்வொரு ஆண்டும் செட் தேர்வை ஏதாவது ஒரு பல்கலை பொறுப்பேற்று நடத்துகிறது. இந்தாண்டு ஜூனில் நடக்க வேண்டிய தேர்வை இதுவரை எந்த பல்கலையும் எடுத்து நடத்த முன்வரவில்லை. இதனால் அறிவிப்பு கூட வெளியாகவில்லை. வரும் காலங்களில் ஒவ்வொரு பல்கலைகளும் தங்களுக்கான தலா ஒரு பிரதிநிதிகளை நியமித்து செட் தேர்வை நடத்துவதற்கு ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பின் கீழ் செட் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நடத்துவதன் மூலம் வரும் வருவாயை அனைத்து பல்கலையும் பகிர்ந்துகொள்ளலாம் என கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.