மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டதை அடுத்து அந்த படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் ஆன்லைனில் மாணவர்கள்
பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நளின் காந்தேல்வால் 701 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் இம்முறை 48.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் எவரும் வராதது ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்சட்டி வேலம்மாள் போதி பள்ளியைச் சேர்ந்த மாணவி சுருதி, தேசிய அளவில் 57-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ள அவர் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 3150 எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளில் சேர நாளை முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.