இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பழைய, 'கட் ஆப்' வெளியீடு

சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இன்ஜினியரிங் மாணவர்கள், தங்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லுாரிகளை முடிவு செய்ய, 'கட் ஆப்' பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களை சேர்ப்பதற்கு, தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது.வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை, 1 லட்சத்து, 8 ஆயிரம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்.வரும், 31க்கு பின், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், இடஒதுக்கீடு விதிகளின்படி, ஜூலையில், கவுன்சிலிங் நடத்தப்படும்.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், எந்த வகை கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் கிடைக்கும் என, முடிவு செய்ய வேண்டியுள்ளது.இதற்கு முந்தைய ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்ட கல்லுாரிகளின், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, நம் நாளிதழில், மே, 14ல் செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து, தமிழக இன்ஜினியரிங் கமிட்டி சார்பில், 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை,tneaonline.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.