கடைகளுக்கு நாளை விடுமுறை: பால் தட்டுப்பாடு ஏற்படும்

சென்னை:'வணிகர்கள் தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும், 10 லட்சம் மளிகை கடைகளும் மூடப்படும்' என, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தேவையான பாலை, வாங்கி வைத்து கொள்ளவும், வியாபாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், நாளை வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 10 லட்சம் மளிகை கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர், எஸ்.பி.சொரூபன் அறிவித்துள்ளார். இந்த சங்கம் சார்பில், மதுரை அவனியாபுரத்தில், வணிகர்கள் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படுகிறது.
பால் தட்டுப்பாடு
கடைகள் மூடப்படும் என்பதால், பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்க நிறுவனர், பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:பால் முகவர்கள், தினமும், 1.50 கோடி லிட்டர், பால் கொள்முதல் செய்கின்றனர். வணிகர்கள் தினமான நாளை, 50 சதவீதம் பால் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.
அன்று பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதால், பொதுமக்கள், தங்களுக்கு தேவைப்படும் பாலை, முந்தைய நாளே, வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சென்னையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் மாநாட்டில், பால் முகவர்கள் பங்கேற்பர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.