அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு

பெரம்பலுார் : -தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பெரம்பலுார் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் செயல்படுவதால், இந்தாண்டு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரித்துள்ளது.கோடை விடுமுறைக்கு பின், வரும், 3ம் தேதி பள்ளிகளை திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போட்டி போட்டு, மாணவர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சில அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதிகள், ஆறு முதல் பிளஸ் 1 வரை ஆங்கில வழிக்கல்வி, மாவட்டந்தோறும் உதாரண பள்ளி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, பெரம்பலுாரில், மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் இணைந்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டன.

விழிப்புணர்வுஇதன்படி, பெரம்பலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வீடு வீடாகச் சென்று, பெற்றோரை நேரில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, அரசு பள்ளிகளின் முக்கியத்துவம், அரசு வழங்கி வரும் சலுகைகள், ஆங்கில வழிக்கல்வி என, பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களது குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.இதையடுத்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதில், பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை, அதிகரித்து வருகிறது.மாதிரி பள்ளிஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு உதாரண பள்ளி துவங்கப்படும் என, அரசு அறிவித்தது. அந்த பள்ளியில், ஆங்கில வழிக் கல்வி, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படும். இந்த கல்வி ஆண்டு முதல், பெரம்பலுார் மாவட்டத்தில், பாடாலுார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், உதாரண பள்ளி துவங்கப்பட உள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது.இங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி. வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதன் சுவர்களில் குழந்தைகளை கவரும் வகையில், 'கார்ட்டூன்' படங்கள் வரையப்பட்டு உள்ளன.

மேலும், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி வளாக சுற்றுச்சுவரில், தலைவர்களின் உருவப்படம், இயற்கை ஓவியங்கள் மற்றும் தமிழக கலாசாரத்தை வெளிப்படுத்தும் படங்களும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.இதன் மூலம், தனியார் பள்ளிக்கு நிகராக பாடாலுார் அரசினர் மேல்நிலைப் பள்ளி காட்சிஅளிக்கிறது.