அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு

சென்னை : கோடை வெயிலின் உச்சகட்டமான, அக்னி நட்சத்திர காலம், இன்றுடன் முடிகிறது. ஆனாலும், 'வெயில் கொளுத்துவது தொடரும்' என, வானிலை மையம்
அறிவித்துள்ளது.கோடை வெயிலின் உச்சகட்ட காலமான, அக்னி நட்சத்திரம், மே, 4ல் துவங்கியது; 25 நாட்களாக நீடித்தது இன்றுடன் முடிகிறது.'ஜோதிட அடிப்படையிலான, அக்னி நட்சத்திர காலம் முடிவதற்கும், கோடைக் காலம் முடிவதற்கும் தொடர்பில்லை. எனவே, வரும் நாட்களில், வெயில் இன்னும் அதிகரிக்கும்.

ஜூன் முதல் வாரத்தில், பருவமழை தீவிரம் அடையும் வரை, வெயிலும், அனல் காற்றும் குறைய வாய்ப்பில்லை' என, வானிலை மையம் கணித்துள்ளது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 44.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. வேலுார், 43; கரூர் பரமத்தி, திருச்சி, 42; பாளையங்கோட்டை, 41; சேலம், நாமக்கல், சென்னை விமான நிலையம், 40 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில், 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் பெரியாறில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.