பார்வைத்திறன் குறைபாடு: மாணவருக்கு மருத்துவ படிப்பு

மதுரை, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தென்காசி விபின் பார்வைத் திறன்
குறைபாடு உள்ளவர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 285 வது ரேங்க் பெற்றார். ஆன்லைன் கலந்தாய்வில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரியில் விபினுக்கு 2018 ல் இடம் ஒதுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டதால், அதற்குரிய சான்று சமர்ப்பிக்க விபினுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவக் குழு முன் ஆஜரானார். அவருக்கு 90 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளதால், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகள்படி ( எம்.சி.ஐ.,)மருத்துவப் படிப்பில் சேர தகுதியற்றவர் என சான்று அளிக்கப்பட்டது. இதனால் கல்லுாரியில் விபினுக்கு 'சீட்' மறுக்கப்பட்டது.இதை எதிர்த்து அவர் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி சீட் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.தனிநீதிபதி, 'விபினுக்கு மாநிலத்தில் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லுாரியில் இடம் ஒதுக்க வேண்டும்,' என 2018 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது. விபின் தரப்பு மூத்த வழக்கறிஞர், ''முக்கிய உடலுறுப்புகள் செயலிழந்தவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டப்படி அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 5 சதவீதத்திற்கு குறையாத இடங்களை ஒதுக்க வேண்டும்,'' என்றார்.நீதிபதிகள்: ஐ.நா., உடன்படிக்கையின்படி, 2016 ல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சமீபத்திய வழிகாட்டுதல் மாற்றுத்திறனாளிகளை பாகுபடுத்தும் வகையில், சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. சட்டப்படி ஊனத்தின் தன்மை 40 சதவீதம் இருந்தாலே, உயர்கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்குரிய பலன்களைப் பெற உரிமை உண்டு. நாம் நாட்டில் கடினமான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுடன் நட்பு பாராட்டுவதில்லை. இது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஒய்.ஜி.பரமேஸ்வரா. இவர் பார்வையற்ற முதல் இந்திய டாக்டர். மருத்துவத்துறையில் சாதனைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். விபினின் கனவை சிதைக்கக்கூடாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். விபினுக்கு 2019-20 கல்வியாண்டில் சீட் ஒதுக்க வேண்டும். விபினின் தொடர் முயற்சியை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றனர்.