பள்ளி சீருடை மாற்றம்: அரசாணை வெளியீடு

 பள்ளி சீருடை மாற்றம்: அரசாணை வெளியீடுசென்னை:பள்ளி சீருடை மாற்றம்
குறித்து, பெற்றோர் குழப்பத்தில் உள்ளதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதும், அது தொடர்பான புதிய அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத் திட்டம், தேர்வு முறை, ஆசிரியர்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றில், 2017 முதல், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.இதன் ஒரு கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு ஒரே விதமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2க்கு, மற்றொரு விதமாகவும், சீருடைகள் மாற்றப்பட்டன. அதேபோல, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் சீருடை நிறம், வடிவமும்மாற்றப்பட்டது.இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய சீருடை, கவுரவமாக இல்லை என்ற, புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரைக்கும், சீருடையை மாற்றப் போவதாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 2018 டிசம்பரில் அறிவித்தார்.புதிய சீருடைகளின், மாதிரி புகைப்படத்தையும், அவர் வெளியிட்டார். ஆனால், இது குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், எந்த சுற்றறிக்கையும் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை.அதனால், எந்த சீருடையை வாங்குவது என தெரியாமல், பெற்றோர் தவித்தனர்.பள்ளிகளுக்கு சென்று, பெற்றோர் விசாரித்தால், 'ஜவுளி கடையில் கேட்டு கொள்ளுங்கள்' என, தலைமை ஆசிரியர்கள்தெரிவித்தனர்.துணி கடைக்கு சென்ற பெற்றோரிடம், 'பள்ளியில் சீருடையை தெளிவாக கேட்டு வாருங்கள்' என்றனர்.இந்த குழப்பம் குறித்து, நமது நாளிதழில், மே, 15ல், செய்திவெளியானது.இதையடுத்து, பள்ளி கல்வித் துறை சார்பில், ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிறப்பிக்கப்பட்ட அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு, கரும்பச்சை கீழாடை, கட்டம் போட்ட வெளிர் பச்சை மேலாடை; ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கு, சந்தன நிறத்தில் கீழாடை, கட்டம் போட்ட மேலாடை மற்றும் சந்தன நிற மேல் கோட்டும், சீருடையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் ஆலையுடன்ரகசிய பேரமா?
தமிழக பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மீண்டும் மூடுமந்திரமாக மாறி வருகின்றன. அரசாணைகள், சுற்றறிக்கைகளை ரகசியமாக வைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதால், நிர்வாக சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. சீருடை மாற்றம் குறித்து, அரசாணை பிறப்பித்து, ஐந்து மாதங்கள் தாண்டிய நிலையில், அதை பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும், பள்ளி கல்வித் துறை தெரியப்படுத்தவில்லை.மாறாக, தனியார் துணி ஆலைகளுக்கு மட்டும், அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வட மாநில தனியார் ஆலை, தமிழக பள்ளி மாணவர்களின் சீருடையை, அரசு முத்திரையுடன் பள்ளிகளுக்கும், துணி கடைகளுக்கும் அனுப்பி, மொத்த வியாபாரம் செய்கிறது.பெற்றோருக்கும், பள்ளிகளுக்கும் கூட வழங்கப்படாத அரசாணையை, ரகசியமாக, தனியார் ஜவுளி உற்பத்தி ஆலைக்கு மட்டும், முன்கூட்டியே வழங்கியது ஏன்?