5 ஆண்டுகளாக சரியும் தேர்ச்சி விகிதம்: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு விவரம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில்,
500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 13 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 17,74,299 மாணவர்களில் 17,61,078 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 16,04,428 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.cbse results.nic.in, examresults.net, digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் திங்கள்கிழமை (மே 06,2019) மதியம் 2.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
92.45 சதவீத தேர்ச்சியுடன் மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாணவர்கள் 90.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 3-ஆம் பாலின மாணவர்கள் 94.74 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
7 மாணவர்கள், 6 மாணவிகள் உட்பட 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 13 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்களுடன் 24 மாணவர்கள் 2-ஆம் இடத்தையும், 500-க்கு 497 மதிப்பெண்களுடன் 58 மாணவர்கள் 3-ஆம் இடத்தையும் பெற்றனர்.