சிவில் சர்வீசஸ் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை:சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளுக்கு, 2018ல், முதல் நிலை தேர்வு நடந்தது. இதில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், 3,500 பேர் முதன்மை தேர்வில் பங்கேற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்., முதல், மார்ச் வரை நேர்முக தேர்வு நடந்தது.இந்த தேர்வில், 759 பேர், பணி நியமனத்துக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களின் பெயர் மற்றும் பதிவு எண் விபரங் களை, இந்திய குடிமையியல் பணிகள் ஆணையமான, யு.பி.எஸ்.சி., நேற்று, https://upsc.gov.in என்ற, இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.தேசிய அளவில் தேர்வானவர்களில், 182 பேரும், முதல், 25 பேரில், 10 பேரும் பெண்கள். அகில இந்திய அளவில், மும்பை ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படித்த மாணவர், கனிஷ்க் கட்டாரியா முதலிடம் பெற்றுள்ளார்.
பெண்களில், போபாலை சேர்ந்த, சுஷ்டி ஜெயந்த் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த, 11 பேர் முன்னிலை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். மனித நேயம் பயிற்சி மையத்தில் படித்த, 30 பேரும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியை சேர்ந்த, ரிஷப் என்பவர், அகில இந்திய அளவில், 23ம் இடத்தையும், தமிழக அளவில், முதலிடத்தையும் பெற்றுள்ளார்.