ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு?- அதிர்ச்சித் தகவல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை
உடனடியாக அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் அரசு ஊழியர்கள்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், தொடர்ந்து போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ``நாங்கள் அரசியல் செய்தால் தமிழகத்தில் யாரும் ஆட்சி செய்ய முடியாது'' என எச்சரித்தனர். பல இடங்களில் போராட்டத்தை ஒடுக்க மறைமுகமாக அரசு களமிறங்கியது. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படும் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பேனராக வைத்தார்கள் ஆட்சியாளர்கள். இதற்காக ஆயிரக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கப்பட்டது. போராட்டம் உச்சத்தில் இருந்த ஜனவரி 27-ம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு விளம்பரம் வெளியிட்டது அரசு. `அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோள்' என்ற தலைப்பிட்டு நீண்ட விளக்கத்தை அந்த விளம்பரத்தில் அளித்தார்கள்.