பாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள வேண்டும் - இயக்குனர் உத்தரவு

போதிய பாடவேளை இல்லாத, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,கீழ்நிலை வகுப்புகளை கையாள அனுமதிப்பதோடு, இது சார்ந்த விபரங்களை, வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு, ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம்,பாடவேளை எண்ணிக்கைகுறித்து விளக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல பள்ளிகள் பின்பற்றாததால், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டியுள்ளது.எனவே, அனைத்து நிலை வகுப்புகளுக்கும், அரசாணையின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை மூலம், சி...,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
பள்ளிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசாணையின்படி, தொடக்க கல்வித்துறையில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிப்பது அவசியம்.
கூடுதலாக இருந்தால், தனிப்பிரிவு துவங்கலாம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.ஆங்கில பிரிவில், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்.
 
இதை விட குறைவாக இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுடன், ஆங்கில வழி பாடப்பிரிவை இணைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதுமுதுகலை ஆசிரியர்கள், வாரத்துக்கு 28 பாடவேளைகள் கையாள வேண்டும். மேல்நிலை வகுப்புகளில், குறைவான பாடவேளைகள் கையாளும் ஆசிரியர்களை, கீழ்நிலை வகுப்புகளாக கருதப்படும், ஒன்பது, பத்தாம் வகுப்பு பாடத்தை கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நடைமுறையை பின்பற்றி, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 28ம் தேதி, சென்னை, எழும்பூர் மாநில மாகாண மகளிர்மேல்நிலைப்பள்ளியில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.உறுதி செய்ய ஆய்வு கூட்டம்முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,'' கோவையில் அரசாணைப்படி, ஆசிரியர்களுக்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இதை உறுதி செய்ய, வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இயக்குனரகத்துக்கு உரிய கால அவகாசத்துக்குள், இதுசார்ந்த விபரங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்