ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை: 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம்
தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.



தொடர் போராட்டம்



9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் என தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சஸ்பெண்ட், பணியிட மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. போதிய நிதியில்லாத காரணத்தினால், அரசு ஊழயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய தமிழக அரசு, ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களையும் நியமனம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


நடவடிக்கை



இந்நிலையில், சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 9 நாட்களாக நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேசவில்லை. வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்த பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்திய போது, முதல்வர் சந்தித்து பேசுவார் எனக்கூறினார். அதனை தான் கேட்கிறோம். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆசிரியர், அரசு என இரு தரப்பும் ஒரு மித்த கருத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளை முதல் பணி




பிப்., மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது மற்றும் செய்முறை தேர்வு துவங்குவதால், மாணவர்களின் நலன், பெற்றோரின் உணர்வு, முதல்வர் அழைப்பு, கட்சியினர் வேண்டுகோள், நீதிபதியின் கருத்துகளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். கோரிக்கை அப்படியே உள்ளது. போராடிய நிர்வாகிகள் சிறையில் உள்ளனர். 


ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த பணியிடங்களை காலியாக அறிவித்து மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நாளை (ஜன.,31) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.