டாக்டர்கள் போராட்டம்: நோயாளிகள் தவிப்பு

சென்னை: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நேற்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால்,
நோயாளிகள் பரிதவித்தனர்.தமிழகத்தில், அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 20 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று அரசு மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, போராட்டம் நடத்தினர். மருத்துவமனைகள் முன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்தோர் பரிதவித்தனர்.பல இடங்களில், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், நர்சுகளும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், மருத்துவ நிலைய அலுவலர், கண்காணிப்பாளரும் சிகிச்சை அளித்தனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், முதுநிலை மருத்துவ மாணவர்கள் சிகிச்சை அளித்ததால், பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.அரசு டாக்டர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், 13ம் தேதி, அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். பின், 27 முதல், 29 வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.