'நீட்' தேர்வுக்கு அவகாசம் பள்ளிகளுக்கு அறிவுரை

 டிச. 1-'நீட் தேர்வுக்கான கூடுதல் அவகாசத்தை பயன்படுத்தி, மாணவர் பதிவை அதிகப்படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், பொது பிரிவினருக்கு, 25 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொது பிரிவில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும், நீட் நுழைவு தேர்வில் பங்கேற்கலாம் என, உத்தரவிட்டது.


பிற்படுத்தப்பட்ட பிரிவினரில், 30 வயதுக்கு மிகாதவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்ற நடைமுறையில், மாற்றம் செய்யவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில், நீட் தேர்வு பதிவுக்கு கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முடிவதாக இருந்த, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த கூடுதல் வாய்ப்பை பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் விடுபட்டவர்களையும், பதிவு செய்து, தமிழக மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, அறிவுறுத்தப்பட்டுள்ளது.