ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம்?

தமிழக அரசு சமூக நலத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்காததால் ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது.தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் தங்கவும்; அவர்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது.


ஆனால் மாவட்டம் தோறும் சமூக நலத்துறையின் கீழ் அன்னை சத்யா ஆதரவற்றோர் மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருவதுடன், அதே வளாகத்தில் 5ம் வகுப்பு வரை பள்ளியும் செயல்படுகிறது.அன்னை சத்யா ஆதரவற்றோர் மாணவிகள் விடுதியில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளும் தங்கி பயில வாய்ப்பு உள்ளது. ஆனால் 6ம் வகுப்பு முதல் மாணவிகள் வெளியே உள்ள அரசு பள்ளிக்குச் சென்று படிக்கலாம். அன்னை சத்யா ஆதரவற்றோர் விடுதியில் தங்கிக் கொள்ளலாம்.இங்கு, மூன்று வேளை உணவு வழங்கப்படும். 

இந்த இல்லத்தில் தந்தை அல்லது தாய் இல்லாத; அல்லது இருவரும் இல்லாத ஏழை மாணவிகளே தங்கி படிக்க முடியும். 2016ம் ஆண்டு வரை இந்த இல்லத்தில் தங்கி படிக்க எவ்வித எண்ணிக்கை கட்டுபாடும் இல்லாமல் இருந்தது.இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 450 மாணவிகளுக்கு மேல் தங்கி படித்து வந்தனர். கடந்த ஆண்டு ஓரளவுக்கு எண்ணிக்கையை குறைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், நடப்பு ஆண்டு புதியதாக மாணவிகளை சேர்க்க வேண்டாம் என தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

இதனால் புதிய மாணவிகளை சேர்க்காததால் கடலூர் அன்னை சத்யா இல்லத்தில் 160 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர். இந்த கெடுபிடியால் மாணவிகள், வெளியே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விடுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பல மாணவிகள் ஏழ்மை நிலையில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் சென்று படிக்க வேண்டியுள்ளது. இவர்கள் அங்கு முறையாக படிக்க முடியுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.

கடலுார் இல்லத்தில் தங்கி படித்த மாணவி ஒருவர் சமூக ஆர்வலர் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்து முடித்து வேலைக்கான அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக தேர்ச்சி பெற்றுள்ளார்.ஒரு மாணவி போலீசிலும், ஒரு மாணவி பொறியியல் முடித்து தனியார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர். இதேபோன்று பல மாணவிகள் இங்கு தங்கி நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். மாணவிகளின் வாழ்க்கையில், கல்வியில் சிறக்க வழியாக இருந்த இந்த இல்லத்தில் மாணவிகள் சேர்க்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் ஆதரவற்ற மாணவிகளின் கல்வி கேள்வி குறியாகியுள்ளது.தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது ஆதரவற்ற மாணவிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற இதுபோன்ற இல்லங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தொடர்ந்து ஆதரவற்ற மாணவிகளை சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.