இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு

புது தில்லி: இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா தில்லியில் ஞாயிறன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராவத்தின் பதவிக் காலம் நவமபர் 30-ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் பதவியேற்று கொண்டார். அவரது தலைமையில் வருகிற 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும்.
அத்துடன் சேர்த்து ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, மஹாராஷ்டிரா, ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களையும் அவரே பொறுப்பேற்று நடத்த உள்ளார்.
கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த சுனில் அரோரா, தேர்தல் ஆணையத்தின் மிக மூத்த அதிகாரியாவார்.
62 வயது நிரம்பிய அரோரா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் மற்றும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.
அத்துடன் நிதி, ஆடை மற்றும் திட்ட ஆணையம் போன்ற துறைகளிலும் இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.