ஆசிரியர் விகிதம் பின்பற்றாத தனியார் பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கல்வி துறை முடிவு

ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்க, மெட்ரிக் இயக்ககம் முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும், அனைத்து தரப்பினருக்கும், பள்ளி படிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இலவச மற்றும், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தது.இச்சட்டப்படி, ஒவ்வொரு வகுப்புக்கும், மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.


அதாவது, தொடக்க பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்; நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும்.அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இந்த விதியை பின்பற்றியே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., - மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி இல்லாமல், ஆசிரியர் விகிதம் குறைவாகவே உள்ளது. பல பள்ளிகளில், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓர்ஆசிரியரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால், அனைத்து மாணவர்கள் மீதும், தனிக்கவனம் செலுத்த முடியாமல், சில மாணவர்களுக்கு மட்டும் அக்கறை எடுத்து, கற்று தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.எனவே, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர், மாணவர் விகித பட்டியலை சேகரிக்க, மெட்ரிக் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.பட்டியல் கிடைத்ததும், ஆசிரியர் விகிதம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.