32 மாவட்டங்களிலும் தேர்வுத் துறை அலுவலகங்கள்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுôரில் மண்டல அலுவலகங்களும் உள்ளன.
தமிழகத்தில் கல்வி ஆண்டப இறுதியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதுதவிர 8-ஆம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது.பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
 
அலைச்சலைத் தவிர்க்க... தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மண்டல அலுவலகங்களுக்கும் சென்று வருவதைத் தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் செயல்படவுள்ளன.
அனைத்து சான்றிதழ்களையும் பெறலாம்: இதன் மூலம் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், தேர்வு மற்றும் சான்றிதழ் தொடர்பாக சென்னைக்கு வரத் தேவையில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், பெயர் மாற்றம், தேர்வு விவகாரங்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.