ஊட்டி அருகே பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.15 கோடியில் நவீன பள்ளி

ஊட்டி அருகே, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின மாணவர்களுக்காக, நவீன உண்டு உறைவிடப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் குழந்தைகள், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கில், மத்திய - மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. 


இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கோடப்பமந்து பகுதியில், ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளி சில ஆண்டுகளுக்கு முன், துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி அடுத்துள்ள முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் வகையில், நவீன வசதிகளுடன் உண்டு உறைவிடப்பள்ளி கட்டட பணிகள் நடந்து வருகின்றன.


பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்ரமணியம் கூறியதாவது: முத்தோரை பாலாடா வில் உள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் மாணவ -மாணவியருக்காக உண்டு உறைவிட பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரமான கல்வி பெற முடியும். இவ்வாறு கூறினார்.