சனி தோஷம், பித்ரு தோஷம் மற்றும் புணர்ப்பு தோஷத்தைப் போக்கும் மஹாளயபக்ஷ புரட்டாசி சனி பிரதோஷம்!

இன்று சனிக்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்ற அனைத்துச்
சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற இருக்கிறது. பொதுவாக ஜாதகத்தில் ஸர்ப தோஷம் உட்பட எந்தத் தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லாத் தோஷமும் நீங்கிவிடும். உலகைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்த்தனைகளை ரகசியமாகச் சொல்வார்கள்.
சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, ரிஷிகள், முனிவர்கள், மனிதர்கள் மற்றும் சகல ஜீவ ராசிகள் அனைவரும் பிரதோஷ தினத்தில் சிவனை வணங்குகின்றனர். அதே நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைப்பிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.
சனி மஹா பிரதோஷம்
சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து அமைந்துள்ளதால் இதனை சனி மஹா பிரதோஷம் எனச் சிறப்பாக கூறப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரஹத்தின் தசா புத்தி நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது அனைத்து கிரஹ தோஷங்களையும் போக்கும் சிறப்பு மிக்கதாகும். எனவேதான் இதனை சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.

ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்குச் சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.
புரட்டாசி சனிக்கிழமை
சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்தப் பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விரதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம். எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனையும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இலவசமாகவே கிடைத்திடும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக செலுத்துவர். தானமாகப் பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்குப் பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறையக் காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
சனி-சந்திர சேர்க்கை தரும் புணர்ப்பு தோஷம்
இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவைப் புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்க்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும். புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
நீண்ட ஆயுள் தரும் சனி
ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளைப் பறிக்கும் தொழிலைச் செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்மவினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்குப் பிடிக்காது.

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை நாம் பார்க்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலை பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ருஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பந்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.
யாருக்கெல்லாம் சனி மஹா பிரதோஷம் சிறப்பு தரும்?
1. ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் சனீஸ்வரர் பயணம் செய்யும் தனூர் ராசி மற்றும் லக்னகாரர்கள். அவர்களுக்கு மிதுனம் ஏழாம் வீடாக வந்து அதனை தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார்
2. மிதுன ராசி லக்ன காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடான தனுசு ராசியில் பயணம் செய்து தனது சம சப்தம பார்வையால் மிதுனத்தைப் பார்ப்பது.

3. சனீஸ்வர பகவான் தனது 3-7-10 பார்வையாலும் தனது திரிகோண பார்வையாளும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைப் பார்க்கிறார், "குரு இருக்கும் இடம் பாழ் - சனி பார்க்கும் இடம் பாழ்" என்பது சொல்வழக்கு. எனவே மேஷ, மிதுன, சிம்ம கன்னி, தனுசு, கும்ப ராசிகளை இரண்டாம் வீடுகளாக (குடும்ப ஸ்தானமாக) கொண்ட மீனம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் / லக்னகாரர்கள் குடும்ப வாழ்க்கை சிறக்க சனி பிரதோஷ தரிசனம் செய்வது நல்லது.
4. கணவன்/மனைவியை குறிக்குமிடமாக களத்திர ஸ்தானம் எனப்படு ஏழாம் வீட்டைக் குறிப்பிடுவார்கள். எனவே மேஷ, மிதுன, சிம்ம, கன்னி, தனுசு, கும்ப ராசிகளை ஏழாம் வீடுகளாகக் கொண்ட துலாம், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், சிம்மம் ராசி/லக்னகாரர்கள் குடும்ப வாழ்வில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இந்த சனி மஹா பிரதோஷத்தில் ரிஷபாரூடரை வணங்குவது நல்லது.

5. நீங்கள் நினைப்பது புரிகிறது. 12 ராசிகளையும் கூறிவிட்டீர்கள். எதைத்தான் விடுவது என்பதுதானே? பன்னிரண்டு ராசி/லக்னகாரர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தானே? எனவே 12 ராசி லக்னகாரர்களும் இந்த சனி மஹா பிரதோஷத்தில் வணங்குவது தான் சிறப்பு. ஒரு ராசியில் நின்று 12 ராசிகளையும் கட்டுப்படுத்துகிறார் அல்லவா? அதனால் தான் சனீஸ்வர பகவானை நீதிமான் எனப் போற்றுகிறோம்.
உங்களுக்கு வேலையில் பிரச்னையா? உங்கள் தகுதிக்கேற்ப அதிகாரம் இல்லையா? உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கவில்லையா? அப்படியென்றால் நீங்கள் திருமயிலை கபாலீஸ்வரர் மற்றும் அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சனி பிரதோஷ காலத்தில் பிரதோஷ நந்தியைத் தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். அடுத்த அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும். இந்த சனி மஹா பிரதோஷ நன்னாளில் சிவனை குடும்ப சமேதராக தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510