1.5 கிலோவுக்கு மேல் புத்தக சுமை கூடாது? : மெட்ரிக் இயக்குனர்

மாணவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், புத்தக சுமையை எளிதாக்கும்படி, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. ஒன்று மற்றும், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1.5 கிலோவுக்கு மேலான புத்தக சுமை கூடாது என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மாணவர்களுக்கு அதிக வீட்டு பாடம் கொடுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இதில், '2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் தரக்கூடாது' என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு, அனைத்து வகை பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும், நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் தரக்கூடாது' என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், அனைத்து மாவட்ட தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளும், 2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் வழங்கக் கூடாது. 

புத்தக சுமை குறித்து, ஏற்கனவே, சமச்சீர் கல்வி திட்டம் அமலான போது, தமிழகத்தில், சில விதிகள் அறிவிக்கப்பட்டன.அதன்படி, ஒன்று மற்றும், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1.5 கிலோ; 3, 4ம் வகுப்புகளுக்கு, 2 கிலோவுக்கு மேலான, புத்தக பை எடை இருக்க கூடாது. 5ம் வகுப்புக்கு, 2.2; 6ம் வகுப்புக்கு, 3.25; 7ம் வகுப்புக்கு, 3.35; 8ம் வகுப்புக்கு, 3.75 கிலோ எடைக்கு மேல், புத்தக பை எடை இருக்க கூடாது.மாணவர்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் படி, அதிக எடையுள்ள கூடுதல் புத்தகங்களை, பள்ளிகள் வழங்க கூடாது. இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.