ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது : முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 363 ஆசிரியர்கள் மற்றும், 10 பேராசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கி, முதல்வர் பழனிசாமி
கவுரவித்தார். விழாவில், ''இந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கு, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்,'' என, அவர் அறிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின், 130வது பிறந்த நாளான நேற்று, தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், சென்னையில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, விருதுகள் வழங்கினார். இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்கள் உட்பட, பள்ளிகளில் பணியாற்றும், 363 ஆசிரியர்களுக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும், 10 பேராசிரியர்களுக்கும், ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும், வெள்ளி பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள, 40 பள்ளிகளுக்கு, துாய்மை பள்ளி விருது வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தமிழ் வழி கல்வியில் படித்த மாணவர்களில், தேர்வு மற்றும் இதர செயல்பாடுகளில் முன்னிலை பெற்ற, 960 பேருக்கு, காமராஜர் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுடன், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, 'அனுபவ வழி கல்வி மற்றும் காந்திய அடிப்படை கல்வி' என்ற புத்தகத்தையும், முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது:இந்த ஆண்டில், 20 புதிய தொடக்க பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன; 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 32 மாவட்டங்களில், மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், 3,090 உயர்நிலை பள்ளிகளுக்கு, தலா, 10 கணினிகளும், 2,939 பள்ளிகளுக்கு, தலா, 20 கணினிகளும் வழங்கப்பட உள்ளன.பொது தேர்வு முடித்த மாணவர்கள், 15 லட்சம் பேருக்கு, உயர் கல்வி வழிகாட்டும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதுமை பள்ளி, கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த ஆண்டு முதல், மாணவர்களின் சிந்தனை திறன், நற்பண்பு, பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், வரவேற்புரை ஆற்றினார். தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆசிரியருக்கு விருது இந்த ஆண்டில் முதன்முதலாக, மாற்று திறனாளி ஆசிரியர்கள் இருவருக்கு, விருது வழங்கப்பட்டது. அதில் ஒருவரான, வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அருகில் உள்ள, பள்ளிகொண்டா, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ரவிச்சந்திரன்; பார்வை திறனற்றவர்.
மற்றொருவரான, திருவள்ளூர் மாவட்டம், சுந்தரேசர் நகர், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர், முனுசாமி; உடல் ஊனமுற்றவர்.
ஓய்வு முகாம் : அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இந்தியாவில், திறமையான ஆசிரியர்கள், தமிழகத்தில் தான் உள்ளனர். ஆசிரியர்களுக்கு, எந்த பிரச்னையானாலும், அதை தீர்த்து வைக்க, இந்த அரசு தயாராக இருக்கிறது. தொடர்ந்து பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஓய்வு நேரம் தேவைப்படும். அதற்கு விரைவில், ஒரு முகாம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.