'ஆன்லைன்' நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி : தேசிய தேர்வு முகமை

மத்திய அரசின், 'ஜே.இ.இ., ஆன்லைன்' நுழைவுத் தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்தி, இலவச பயிற்சி தரப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை, கடந்தாண்டு வரை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது.



இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை என்ற, என்.டி.ஏ., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருந்து, என்.டி.ஏ., வழியாக, மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

என்.டி.ஏ., சார்பில், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி, 6 முதல், 20 வரை, முதல்கட்ட, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கி உள்ளது; 30 வரை பதிவு செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளது. 

தேர்வுக்கான விதிமுறை கள் மற்றும் கட்டுப்பாடுகள்,www.nta.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில், ஏதாவது ஒன்றில் தேர்வை எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எழுத்து மற்றும் ஆன்லைன் என, இரண்டு முறைகளில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், எழுத்துத் தேர்விலேயே பங்கேற்றனர். இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பதால், தேர்வை எதிர்கொள்வது எப்படி என, பிளஸ் 2 மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதற்கு தீர்வு தரும் வகையில், ஆன்லைன் தேர்வில் பங்கேற்பது குறித்து, என்.டி.ஏ., சார்பில், இலவச மாதிரி தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான தேர்வு மையம் மற்றும் பயிற்சி தேதிகள், விரைவில் வெளியிடப்படும் என, என்.டி.ஏ., தெரிவித்து உள்ளது.