ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மதுரை:"தமிழகத்தில் ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவிகளுக்கு மெக்கானிக்கல் இன்ஜி., படிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்," என சென்னை அண்ணா பல்கலை
மற்றும் தொழில் கூட்டுறவு மைய (சி.யு.ஐ.சி.,) இயக்குனர் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:இந்தியா 2020ல் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாகவும், வாகனங்களின் பயன்பாடு மற்றும் தேவைகளில் 3வது பெரிய சந்தையாகவும் மாறும் வாய்ப்புள்ளது. தற்போது உலக அளவில் பெரிய கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் 3.05 கோடி வாகனங்கள் தயாரிக்கின்றனர். இந்தாண்டு இறுதியில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.

இதற்கு மெக்கானிக்கல் இன்ஜினியர் அதிகம் தேவை. இச்சூழலில் பல்கலை மற்றும் தொழில் கூட்டுறவு மையம் மற்றும் ரெனால்டு நிசான் டெக்., நிறுவனத்துடன் இணைந்து பள்ளி அளவில் மாணவர்களிடையே மெக்கானிக்கல் இன்ஜி., படிப்பை தேர்வு செய்யவும், அதில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்வி உதவித்தொகை யுடன் (சி.எஸ்.ஆர்.,) படிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரு லட்சம் மாணவர்களுக்கு சி.யு.ஐ.சி., மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பொறியியல் மாணவர்களுக்கு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகின்றன.

பிற நாடுகளில் பொறியியல் துறையில் பெண்கள் 30 சதவீதம் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 7 சதவீதமே பெறுகின்றனர். இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்றார்.