இன்று ஆசிரியர் தினவிழா 363 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினவிழா, இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி,
ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மத்திய, மாநில அரசுகள், ஆசிரியர் களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றன. இந்த ஆண்டு, ஆசிரியர் களுக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தில், கோவையை சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியை சதி உட்பட, நாடு முழுவதும், 45 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


தமிழக அரசு சார்பில், ஆசிரியர் தினவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடக்கிறது. இந்த விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு, முதல்வர் பழனிசாமி, விருதுகள் வழங்க உள்ளார். தமிழகத்தில், 363 ஆசிரி யர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 40 பள்ளிகளுக்கு, துாய்மை பள்ளி விருது தரப்படுகிறது.

அதேபோல, 2017- - 18ல், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, காமராஜர் விருது மற்றும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, விருது மற்றும் உதவித்தொகை வழங்கப்படுவது, இதுவே முதல் முறை.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.