'சிப்' பொருத்திய, 'டெபிட்' கார்டு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., வரும், டிச., 31க்குள், 'இ.எம்.வி., - சிப்' உடன் கூடிய புதிய, 'டெபிட்' கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வலியுறுத்தி உள்ளது.

சமீப காலமாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நிகழ்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இ.எம்.வி., எனப்படும், 'ஈரோபே மாஸ்டர் கார்டு விசா' சிப் பொருத்தப்பட்ட புதிய, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், புதிய டெபிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகேட்டுக் கொண்டுள்ளது. இந்த வகை டெபிட் கார்டுகளும், அதனுடன் அளிக்கப்படும், 'பின்' எனப்படும், தனித்துவ அடையாள எண்ணும், 'ஸ்கிம்மிங்' கருவி மூலம் மோசடி செய்ய முடியாதவை.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட அறிக்கை: புதிய மாற்றத்துக்கான நேரம் வந்துள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், 'இ.எம்.வி., - சிப்' பொருத்தப்பட்ட புதிய டெபிட் கார்டுகளை, வரும், டிச., 31க்குள் மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு, 28.9 கோடி டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.